தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரை மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு முடிவுகள் வெளியாகின. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமானத்தில் சென்னை வந்து சேர கால தாமதம் ஆனதால் முடிவுகள் தள்ளிப் போனதாக சொல்லப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், நடப்பு கல்வியாண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டார்.
பொதுத் தேர்வு முடிவுகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை
மேலும் பேசுகையில், தேர்வு வராத 47 ஆயிரம் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசித்திருக்கிறோம். அதில் அடையாளம் காணப்பட்ட, அடையாளம் காண முடியாத என இரண்டு வகையான மாணவர்கள் இருக்கின்றனர். அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு கால் சென்டர் மூலம் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு தேர்வு எழுதுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மாணவர்களுக்கு ஊக்கம்
தேர்வு முடிவுகளை தற்போது பார்த்து கொண்டிருக்கும் பெற்றோர்கள், ஊடக நண்பர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை இதுதான். பிள்ளைகள் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் சரி. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதுதான் பெற்றோர்களாக இருக்கும் உங்களின் கடமை. தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கு உடனடியாக தனித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்கிறோம்.
உயர்கல்வி கற்க ஏற்பாடு
இவர்களும் அடுத்த கல்வியாண்டிலேயே உயர்கல்வியில் சேர தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும். அதற்கு பெற்றோர்களும், உறவினர்களும் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். அவர்களின் இந்த வயது மிகவும் சென்சிடிவாக இருக்கும். மாணவ, மாணவிகள் கூடவே இருந்து ஊக்கப்படுத்தும் வேலைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
அரசு சார்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்
ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்வி வழிகாட்டிக்கு எனக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் இருப்பர்.மதிப்பெண்களை பார்த்துவிட்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் எதை தேர்வு செய்யலாம் என வழிகாட்டி குழு உரிய ஆலோசனைகளை வழங்கும்.எந்த கல்லூரியில் சேர விருப்பம் இருக்கிறது. அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அளிப்பர்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனில், அதற்கான வழிகாட்டக் கூடிய நபர்கள் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோர்கள் வழிகாட்ட முடியாத சூழலில் இருக்கலாம்.இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் உதவிட தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதற்காகவே பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது
பிளஸ் ஒன் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அடுத்து மே 17ஆம் தேதி பிளஸ் ஒன் தேர்வு முடிவுகளும், மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன. இரண்டையும் ஒரே நாளில் வெளியிடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.