கிழக்கு பசிபிக்கில் உள்ள வனுவாட்டு(Vanuatu) நாட்டில் வசிக்கும் பழங்குடியின மக்கள், பிரிட்டன் அரச குடும்பத்தினரைக் கடவுளாக வழிபடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
வனுவாடு என்பது தென் பசிபிக் பெருங்கடலில் 1,300 கிலோமீட்டர் நீளமுள்ள சுமார் 80 தீவுகளால் ஆனது. அதில் டன்னா தீவில், யாவோனானென், யாகேல் கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரிட்டனின் மறைந்த முன்னாள் அரசர் பிலிப்பை, கடவுளாகவே வழிபட்டு வந்தனர்.
அவர்களின் நம்பிக்கையின்படி, அவரை கடவுளின் சக்தியாகப் பாவித்தனர். அவர் டன்னா தீவில் தான் பிறந்தார் என்றும் நம்புகிறார்கள். ஒரு மலையின் சக்தி அல்லது ஆன்மிக சக்தி தீவை விட்டு வெளியேறி, உலகம் முழுவதற்கும் பயணம் செய்து, உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியை சந்தித்து பின்னர் தீவுக்கு திரும்பியதாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கை முன்னாள் 1974-ல் ராணி எலிசபெத் அவர்களின் கிராமத்துக்கு வருகை தந்ததால் மேலும் தீவிரமானது.
அரசர் பிலிப்ஸ் மறைவின் போதும், ராணி எலிசபத் மறைவின் போதும் மிகவும் துயரம் அடைந்த, இந்த பழங்குடியின மக்கள், பல நாள்களுக்கு துக்கம் அனுசரித்தனர். வேதனையிலிருந்த கிராமம், மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா செய்தியையறிந்தவுடன், விழாக்கோலம் பூண்டது. அவர்களுக்கு அரண்மனையிலிருந்து அரசரின் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவர்களின் பாரம்பரிய நடனங்கள் ஆடியும், அவர்களின் பாரம்பரிய பானமான காவாவை பருகியும், பன்றிகளை அறுத்தும் விழாவைக் கொண்டாடியுள்ளனர். அவர்கள், முடிசூட்டப்பட்டுள்ள மன்னரை, தங்களின் கடவுளின் மகனாக வணங்குகின்றனர்.
“இவர் உண்மையிலேயே டன்னா மக்களுக்கு இன்றியமையாதவர். இளவரசருக்கு முடிசூட்டுவதை நம்பி கொண்டாடும் பலரை நீங்கள் பார்ப்பீர்கள். நிறையச் சடங்குகள் உள்ளன. இங்கே பெண்களும் ஆண்களும் ஒன்றாக நடனமாடுவார்கள். இது இங்கிலாந்து மற்றும் டன்னாவின் வரலாற்றை மீண்டும் கொண்டு வரும்” என்று பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மக்கள் அரசரின் முடிசூட்டு விழாவை கொண்டாடிவரும் நிலையில், இப்படி விநோதமான நம்பிக்கையுடன் கொண்டாடும் பழங்குடியின மக்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.