அதானி மீது ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமமே ஆடிப்போனது. பங்குகள் அனைத்தும் கடும் விழ்ச்சியைச் சந்தித்தன. தற்போது செபி விசாரணை, உச்ச நீதிமன்றம் நியமித்த குழு விசாரணை உள்ளிட்டவற்றில் அதானி குழுமம் இருக்கும் நிலையில் அதானி குழுமத்துக்குக் கடன் வழங்க சில வங்கிகள் முன்வந்துள்ளன.
குஜராத்தில் தொழில்முனைவோராக இருந்த கவுதம் அதானி விரைவிலேயே உலகம் அறியும் பெரும்பணக்காரராக வளர்ந்தது இன்றளவும் நம்பமுடியாத ஆச்சயர்ம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஆச்சர்யம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பணமோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டப் புகார்களால் அதானி குழுமப் பங்குகள் பெருத்த அடி வாங்கின. இதனால் அதானி பணக்காரர் பட்டியலில் தூக்கியடிக்கப்பட்டார். இதையடுத்து அதானி குழுமத்துக்கு வங்கிகள் கடன் தர மறுத்தன. அதானி குழும நிறுவனத்தின் கடன் பத்திரங்களை வாங்கவும் மறுத்துவிட்டன. புதிதாக நிதித் திரட்டவும் முடியாமல் ஏற்கெனவே வாங்கியக் கடன்களை அடைக்க வேண்டிய நிலையும் உண்டானதால் அதானி குழுமத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
ஆனாலும் அத்தனை நெருக்கடிகளையும் அதானி குழுமப் பங்குகள் சமாளித்து சரிவிலிருந்து மீண்டுவந்தன. இதற்கிடையில் அதானி குழுமத்தின் நிதிநிலையைக் காப்பாற்றவும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை மீண்டும் பெறவும் பல்வேறு முயற்சிகளை உத்தி சார்ந்து அதானி குழுமம் மேற்கொண்டது. அவை பலன் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி யுஎஃப்ஜே நிதிக் குழு, சுமிடோமோ மிட்சுய் வங்கி மற்றும் மிசுஹோ நிதிக் குழு ஆகிய மூன்று பெரும் வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
மேலும் அதானி குழுமத்தில் அத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பெருமளவு முதலீடுகளைக் குவித்துவரும் GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் மீண்டும் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. அதானி குழுமத்துக்கு மார்ச் 31, 2023 நிலவரப்படி ரூ. 2.27 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதில் 39% கடன் பத்திரங்களாகவும், 29% சர்வதேச வங்கிகளின் கடன்கள் மற்றும் 32% இந்திய வங்கிகள் மற்றும் NBFC-களின் கடன்களாகவும் இருக்கின்றன.
ஒருபக்கம் ஒழுங்குமுறை அமைப்புகளின் விசாரணை, மறுபக்கம் கட்சிகளின் அரசியல் தலையீடு, இன்னொரு பக்கம் முதலீட்டாளர்கள் என சவால்களுக்குப் பஞ்சமில்லாமல் அதானி குழுமம் இருக்கிறது. இவற்றிலிருந்து மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.