சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. துணை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுகள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கள் பெற இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகள், கட்டண விபரங்கள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மொத்தம் 3,324 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடந்தது. நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது கூடுதலாக 0.54 சதவீதம் அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் ஆண்களை விட பெண்கள் அதிகமாக தேர்ச்சியடைந்தனர்.
இந்த தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு துணை தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 19ம் தேதி துணை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றால், இந்த ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும். பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை கண்டறிந்து துணை தேர்வில் பங்கேற்கவைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சில மாணவ-மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதியும் கூட தாங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் அதனை சரிசெய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை வாய்ப்பு வழங்குகிறது. அதன்படி மாணவ-மாணவிகள் மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களை பெற்று சரிசெய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று (மே 9) காலை 11 மணி முதல் மே 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும்.
தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். அதன்படி விடைத்தாளின் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ.275ம், மறுகூட்டல் என்ற உயிரியல் பாடத்துக்கு ரூ.305ம் பிற பாடங்களுக்கு ரூ.205ம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை அவர்கள் விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.
மேலும் விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய முடியும். விடைத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.