'இராவண கோட்டம்' படத்திற்கு எதிர்ப்பு

சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி நடித்துள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ளார், 'மதயானைக் கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார். இந்த படம் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள கருவேலங்காடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது. வருகிற 12ம் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி தவறான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் ஆகியோர் நேற்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் இராவணக் கோட்டம் என்ற திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் சாதிய வன்மத்துடன் பல தவறான கருத்துகளை விக்ரம் சுகுமாரன் கூறினார். காமராஜர் ஆட்சியில்தான் பனை வெல்லம் காய்ச்ச விறகு தேவைப்பட்டதால் சீமைக்கருவேல மரங்களை அவர் கொண்டு வந்தார் என்றும் கீழ்த்தூவல் துப்பாக்கிச்சூட்டில் 5 அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அவர் ஆட்சியில்தான் என்றும் கூறியிருக்கிறார்.

சீமைக்கருவேல மர விதைகள் 1876ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் விமானம் மூலம் தூவப்பட்டன. இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் இந்த மரம் உள்ளது. காமராஜர் மீது ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. அதை உண்மை என்று நம்பி காமராஜர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இப்படத்தை எடுத்துள்ளனர். எனவே இராவணக் கோட்டம் படத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.