"உங்களிடம் நான் மீண்டும் பேச முடியாமல் போகலாம்" – கைதாவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக கோர்ட்டுக்கு வந்த போது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதாவதற்கு முன்பு இம்ரான் கான் பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த இதிஷாம் உல் ஹக் என்ற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இம்ரான் கான், “எனது பேச்சு உங்களிடம் வந்து சேர்வதற்குள், சட்டத்திற்கு புறம்பான ஒரு வழக்கில் நான் கைது செய்யப்பட்டிருப்பேன். இதன் பின்னர் அடிப்படை உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை புதைக்கப்பட்டு விட்டன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை நான் மீண்டும் சந்தித்து பேச முடியாமலும் போகலாம்.

பாகிஸ்தான் மக்களுக்கு என்னை 50 ஆண்டுகளாக தெரியும். நான் ஒருநாளும் பாகிஸ்தானின் அரசியலமைப்புக்கு எதிராக நடந்து கொண்டது இல்லை. சட்டத்தை ஒருநாளும் மீறியது இல்லை. அரசியலுக்கு வந்த பிறகு எனது போராட்டங்கள் அனைத்தும் அமைதியான முறையில், சட்டத்திற்கு உட்பட்டு தான் இருந்துள்ளது.

ஊழல்வாதிகளின் கூட்டத்தில் நானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் வெளியே வரவேண்டும். சுதந்திரம் என்பது தட்டில் வைத்து தரப்படுவது அல்ல. நாம் தான் அதற்காக போராட வேண்டும்” என்று இம்ரான் கான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.