உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர், மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதனால் உலக சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளது. தற்போது கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன என்று கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டில், கோதுமை தானியங்களை இறக்குமதி செய்து நீண்ட காலமாக கோதுமை மாவை உற்பத்தி செய்யும் 02 நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இருந்து திறந்த பொருளாதாரக் கொள்கையை ஸ்தாபித்து வருகின்றது. மேலும் நாட்டின் கோதுமை மா தேவையில் 100% பூர்த்தி செய்யும் அதிகாரம் இந்த 02 நிறுவனங்களுக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் உலகம் முழுவதும் விநியோக வலையமைப்பு சீர்குலைந்ததன் காரணமாக நாட்டில், இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் இதன் காரணமாக மந்தநிலை மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் மாவுக்கு வரி விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.