புதுடெல்லி: ஊழலை விட வகுப்புவாதமே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் பி.எஸ். சிங் பாகேல் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பு பிரிவான விஸ்வ சம்வாத் கேந்திரா சார்பில், பத்திரிகையாளர்களுக்கு நாரதர் விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது. புதுடெல்லியில் உள்ள புதிய மகாராஷ்டிர சதனில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் மற்றும் தகவல் தொடர்புத்துறை ஆணையர் உதய் மகுர்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பு பொறுப்பாளர் நரேந்திர தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், “இந்தியாவில் தற்போது ஊழலை விட வகுப்புவாதமே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை யாரும் சீர்குலைக்கக்கூடாது என்று அனைவரும் நம்புகின்றனர். அதே நேரத்தில கடந்த 1192ல் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு அகண்ட பாரதம், இந்து ராஜ்யமாக இருந்தது” என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பு பொறுப்பாளர் நரேந்திர தாகூர் பேசும் போது, “போலிச் செய்திகள் மற்ற எல்லோரையும் போலவே ஆர்எஸ்எஸ்-ஐயும் மிகவும் பாதித்துள்ளது. ஊடகங்கள் அதன் முதல் பக்கத்தில் சில நல்ல செய்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.அப்போது தான் மக்கள் ஊக்கத்துடன் இருப்பார்கள்” என்றார்.
பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கும் இந்த விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், “தற்காலத்தில் போலிச்செய்திகளும், டிஆர்பியும் ஊடகங்களை பாதிக்கும் மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. செய்தியாளர்கள் எது சரியானது என்பதை அறிந்து அதனையே எழுத வேண்டும். நாட்டு நலனில் ஊடகத்திற்கான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.