என் மகனுக்கு நல்லாவே நீச்சல் தெரியும்; அவன் எப்படி இறக்க முடியும் – கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்த தந்தை.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, சின்னமுட்டில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பல்லவ். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள குள்ளப்புரம் பகுதியில் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், இவர் தன் சக நண்பர்களோடு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது அருண் கிணற்றில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த சக நண்பர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அருண் பல்லவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் அருண் பல்லவ்வின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அருண் பல்லவ்வின் தந்தை போலீசில் புகார் அளித்தார் அதில், என் மகனுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும். அந்த கிணறு மொத்தமே 20 அடி ஆழம் தான்.
அதிலும் ஏழு அடிதான் தண்ணீர்உள்ளது. பின்பு, எப்படி என் மகன் நீரில் மூழ்கி இருப்பார்?. கல்லூரி நிர்வாகத்தின் மீதும், அவனோடு குளிக்கச் சென்ற சக மாணவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.