கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (மே 10) நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு: கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்வு செய்ய 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பானதாகவும், சுமுகமானதாகவும் நடைபெறுவதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களில் வசதிகள்: இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதாக வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், எழுதுபொருள்கள், விரல் மை உள்ளிட்டவை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவு மையம் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

வாக்களிக்கும் ஆவணங்கள்: வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்பட 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மும்முனைப் போட்டி: இந்த தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றொரு எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர்கள் 206 பொதுக்கூட்டங்களிலும், 90 பேரணிகளிலும் பங்கேற்றனர். மாநில தலைவர்கள் 231 பொதுக்கூட்டங்களிலும், 48 பேரணிகளிலும் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 99 பொதுக்கூட்டங்களையும் 33 பேரணிகளையும் நடத்தி உள்ளது.

வெற்றிக்கு இலக்கு 113 தொகுதிகள்: 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்பு காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கே உள்ளது. கர்நாடகாவில் 1985 முதல் எந்த ஒரு ஆளும் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை நடந்துள்ள பல்வேறு கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெரும்பான்மை பலம் பெறாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு முக்கியமானதாக மாறும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.