காரைக்குடி: காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இடத்தை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த நகராட்சித் துணைத் தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி நகராட்சி குறிச்சிபுரவு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களுக்குரிய இடம் இலுப்பகுடி தேவஸ்தானத்துக்குரியது என கூறி, பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.
இதனால் அந்த சர்வே எண்களுக்குரிய இடத்தை பத்திப்பதிவு செய்வதை பதிவுத்துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இடத்தை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி திமுக நகரச் செயலாளரும், நகராட்சித் துணைத் தலைவர் குணசேகரன் சார்-பதிவாளர் சங்கரமூர்த்தியிடம் வாக்குவாதம் செய்தார்.
ஆனால் சார்-பதிவாளர் மறுப்பு தெரிவிக்கவே, திடீரென குணசேகரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார். இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இலுப்பக்குடி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தை பதிவு செய்ய கூறினார். நாங்கள் மறுத்துவிட்டோம். என்று கூறினார்.