சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர். இவர் சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். இவரின் மனைவி மீனாட்சியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார். மீனாட்சி, அவருடைய 2 மகன்கள், உறவினர்களான கயல்விழி, அவரின் 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 6 பேர் கொடைக்கானலுக்கு ஏப்ரல் 7-ம் தேதி சுற்றுலா வந்தனர்.
கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்தனர். மீனாட்சி, கயல்விழி ஆகியோர் குழந்தைகளுடன் கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மறுநாள் காலையும் வெளியே செல்ல திட்டமிட்டனர். ஆனால் மீனாட்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஹோட்டலிலேயே இருந்திருக்கிறார். இதனால் கயல்விழி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாத தன்னிடம் ஹோட்டல் உரிமையாளரும், கொடைக்கானல் ஹோட்டல் ரிசார்ட் உரிமையாளர் சங்கத் தலைவராகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் அப்துல்கனி ராஜா தவறாக நடந்து கொண்டதாக போலீஸாரிடம் மீனாட்சி புகார் அளித்தார். அதில், உடல்நிலை சரியில்லாதது குறித்து அப்துல்கனி ராஜாவிடம் தெரிவித்ததாகவும், ஹோட்டலுக்கு வந்து உதவி செய்வதாகக் கூறி அவர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதனடிப்படையில் கொடைக்கானல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அப்துல்கனி ராஜாவைக் கைதுசெய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கை திண்டுக்கல் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையில், டி.எஸ்.பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் அப்துல்கனி ராஜாவின் ஹோட்டலிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.