சென்னை: சின்னம்மை நோய் வேரிசல்லா என்னும் வைரஸ் மூலமாக பரவுகிறது. குப்பையில் இருந்து உருவாகி காற்றில் கலந்து பரவும் வைரஸ்களில் ஒரு வகையான வைரஸ்தான் வேரிசல்லா வைரஸ் ஆகும்.
கோடைகாலத்தில் சின்னம்மையின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, அசுத்தமான சூழல் பகுதியில் வசிப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் எளிதாக சின்னம்மையால் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே சின்னம்மைக்கு சிகிச்சை பெறாவிட்டால், நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல்வேறு பகுதிகளில் சின்னம்மையின் பாதிப்பு பதிவாகி வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோடை காலத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பது வழக்கமானது. அதனைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் சின்னம்மைக்கான ‘ஏசைக்ளோவிர்’ மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.