மும்பை: தி கேரளா ஸ்டோரி படக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து அவருக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்தி மொழியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்து பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக கூறும் இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் கடந்த 4 நாட்களில் ரூ.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது. இப்படம் வெறுப்பையும் பரப்புகிறது என்றும், இதனை வெளியிடுவது சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்நாட்டில் படம் வெளியான போதிலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக படம் திரையில் வெளியிடுவது நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இப்படத்திற்கு மத்தியப் பிரதேச மாநில அரசு வரி விலக்கு அளித்துள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்படக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் செய்தி வந்துள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநரான சுதிப்தோ சென், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதுவரை முறைப்படி புகார் கொடுக்காததால், இது குறித்து இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.