நடு இரவில் வீடு வீடாக சென்று பணம் கொடுத்த பாஜகவினர்.. ஒற்றை ஆளாக துரத்தி பிடித்த தேர்தல் அதிகாரி.. மாஸ்

பெங்களூர்:
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு, நடு இரவில் வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்த பாஜகவினரை ஒற்றை ஆளாக தேர்தல் அதிகாரி துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

போலீஸாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல், துணிச்சலாக களத்தில் இறங்கிய அந்த தேர்தல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, கடைசி வரை வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும், காங்கிரஸே வெற்றி பெறும் எனத் தெரிவித்து இருக்கின்றன.

இதனால் கர்நாடகாவில் பாஜகவினர் ஒருவித கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் கூட பரவாயில்லை, காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில் அங்கு பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால், அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கலபுர்கி தெற்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி குர்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த 10 நிமிடங்களில் தனது அலுவலக காரில் ஸ்பாட்டுக்கு வந்தார் தேர்தல் அதிகாரி குர்கர். போலீஸாரிடம் சொன்னால், தகவல் வெளியே கசிந்துவிடும் என எண்ணிய அவர் காவல்துறையினருக்கு கூட கூறாமல் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரியின் காரை பார்த்த பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், தேர்தல் அதிகாரி குர்கர் அவர்களை விடாமல் துரத்திச் சென்று 2 பேரை மடக்கி பிடித்தார். பின்னர் போலீஸார் அங்கு வந்து அவர்களை கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை துணிச்சலாக தனியாக விரட்டிப் பிடித்த தேர்தல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.