இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார்.
இவரது பதவியேற்பு விழா வரும் மே 11 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லை என்ற குறை இருந்தபோது, ‘நானும் டெல்டா காரன் தான்’ என முதல்வர் கூறியிருந்தார். ஆனால், இதற்கும் போதிய வரவேற்பு இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில்தான், மன்னார்குடியை சேர்ந்த டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசரை விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
1)தொண்டர்கள் மீது கல் எறி சம்பவம்:
ஆவடி நாசருக்கு மேயர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வழங்கி அழகுபார்த்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின். நாசர் கோபப்படுகிறார், தொண்டர்களை மதிப்பது கிடையாது என அவர் மீது பல புகார்கள் குவிந்த போதெல்லாம் அதை முதல்வர் ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், பொதுவிடம் என்று கூட பார்க்காமல், தனக்கு கீழ் இருக்கும் நிர்வாகியை கல்லை கொண்டு நாசர் தாக்கியதுதான், ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
2)கோபத்தோடு சென்ற ஸ்டாலின்:
திருவள்ளூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், நாசரை புகழ்ந்துவிட்டுதான் பேச வேண்டிய விஷயத்திற்குள்ளேயே முதல்வர் ஸ்டாலின் வருவார். ஆனால், நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லோரது பெயர்களையும் உற்சாகமாக குறிப்பிட்ட முதல்வர், அமைத்தர் நாசர் அவர்களே எனக் கூறி சிம்பிளாக நிறுத்திக்கொண்டு, அவரை புகழ்ந்து பேசவில்லை. அப்போதே, நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகளால் கிசுகிசுக்கபட்டதாம்.
தொண்டர்கள், நிர்வாகிகள் கொடுத்த புகார் காரணமாகத்தான் ஸ்டாலின் இப்படி அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
3.பேஸ்புக்கிலும் புறக்கணிப்பு:
சிறுமி டான்யாவை முதல்வர் நலம் விராசித்தபோது, நாசரும் உடன் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதில் ஆவடி நாசரின் படம் இடம்பெறாதவாறு எடிட் செய்த பிறகே அதனை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால், அதேவேளையில் CMO TamilNadu என்ற அரசு சார்பில் நிர்வகிக்கப்படும் முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் மட்டும் நாசரின் படம் எடிட் செய்யப்படாமல் அப்படியே இடம்பெற்றிருந்தது.
துறை ரீதியிலான சில சர்ச்சைகளில் ஆவடி நாசர் சிக்கியதால்தான், அப்போது நாசர் மீது ஸ்டாலின் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.