புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ரங்கசாமி உடனடியாக எடுக்க வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.
ஆனால் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் மட்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். புதுச்சேரியில் ஹேமசந்திரன் என்ற மாணவர் தற்போது தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசுக்கு ஹேமச்சந்திரன் உட்பட தமிழகத்தில் தற்கொலை செய்து இறந்த மாணவ மாணவிகள் உடைய இறப்பையும் கருத்திலே கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அது மட்டுமல்ல புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மாணவர் ஹேமச்சந்திரன் இறந்த விஷயத்தில் மௌனம் காக்கிறார். நீட் தேர்வை பற்றி என். ஆர். காங்கிரஸின் நிலை குறித்து ரங்கசாமி விளக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அவரது கூட்டணியில் இருக்கின்ற பாஜக-வின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான அறிக்கைகளை புதுச்சேரி மாநில மக்களுக்கு சட்டமன்றத்தில் கொடுத்திருந்தார். ஆனால் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 18,000 முதியோர் மற்றும் விதவைகளுக்கு அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை ஒரு மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களாக அந்த பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவில்லை. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் இருக்கிறது.
என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் புதுச்சேரியில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் மோடி புதுச்சேரி மாநில மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி பொய்யானது. ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை வஞ்சிக்கின்ற அரசாக புதுச்சேரி அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி வெகு காலம் நீடிக்காது” என்று தெரிவித்துள்ளார்.