ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வேண்டி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், அமைச்சரின் பங்கேற்புடன், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (08.05.2023) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்துக்களும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 இற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் சுற்றுலாத்துறை, பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் திட்டமிடல் துறைசார் தொடர்பான அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் புக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.