கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.
நேற்று கடைசிநாளில் பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அங்கு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். பின்னர், அவர்களோடு பேருந்திலும் பயணித்தார். இந்த பயணத்தின்போது கல்லூரி மாணவிகள் ராகுல் காந்தியோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், செல்பி எடுத்துக்கொள்ளவும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்களோடு, ராகுல் காந்தி புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, சிலருக்கு அவர்களின் மொபைல்போன்களை வாங்கி அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சாலை மார்க்கமாக வாகனப் பேரணி போன்ற முறைகள் மூலமும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
பாஜக சார்பில் நேற்று ஜெ.பி. நட்டா, அமித் ஷா, நரேந்திர மோடி போன்றவர்களின் பிரச்சாரம் இல்லை. அதேநேரத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஷிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளரான தனது மகன் பிஎஸ் விஜயேந்திராவுடன் எடியூரப்பாக இணைந்து வாக்குகளைக் கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, லிங்காயத் மக்கள் அனைவரும் பாஜகவோடு இருக்கிறார்கள்; அவர்களின் வாக்கு பாஜகவுக்கே கிடைக்கும் என தெரிவித்தார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, சென்னபட்னாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கன்னட மக்களுக்கானதாக கர்நாடகம் விளங்க வேண்டும் என்றால் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற வேண்டும் என அவர் பிராந்திய உணர்வை தூண்டும் விதமாகப் பேசினார். சாதி, மதம், மொழி, பிராந்தியம் உள்ளிட்ட உணர்வுகளைத் தூண்டும் விதமாக பல்வேறு கட்சிகளும் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.