இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் கைதைக் கண்டித்து ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தின் மீது இம்ரான் கான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டுகளை வீசி ராணுவ வாகனங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர். லாகூரில் போராட்டக்காரர்களால் பல போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
லாகூரில், செனட்டர் இஜாஸ் சவுத்ரி தலைமையில் பிடிஐ கட்சியின் லிபர்ட்டி சவுக்கில் கூடினர். போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். லாகூரில் உள்ள ராணுவ கமாண்டர் இல்லத்தைச் சுற்றிவளைத்து, கேட், ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடியுள்ளனர்.
இதற்கிடையே, போராட்டக்காரர்கள் ஐஎஸ்ஐ தலைமையகத்தை குறிவைக்க முயன்றபோது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பொது ஒலிபரப்பான ரேடியோ பாகிஸ்தானின் கட்டிடம் தீவைக்கப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.