இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கே மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. பிடிஐ கட்சியினர் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.. அதன் பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், அந்த வழக்குகளில் கைதாவதை அவர் தொடர்ந்து தவிர்த்தே வந்தார்.
இதற்கிடையே வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அவர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். 70 வயதான இம்ரான் கான் துணை ராணுவப் படையினரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான்: துணை ராணுவப் படையினர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து, அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து, அவரை வெளியே இழுத்துச் சென்றதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் மூத்த அதிகாரி மீது கான் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவர் அப்படிப் பேசிய மறுநாளே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் இப்போது கைது செய்யப்பட்டார். இப்போது அங்கே எந்தவொரு பதற்றமான சூழலும் இல்லை என்றும் வழக்கமாகவே நிலைமை இருப்பதாகவும் இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உண்மை நிலவரம் வேறாகவே இருக்கிறது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்: இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிடிஐ கட்சி பெருந்திரளான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இம்ரான் கான் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனப் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா என்றார். அவர் மேலும் கூறுகையில் “தேசிய கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது எந்த வன்முறைச் சம்பவமும் நடக்கவில்லை” என்றார்.
வீடியோ: முன்னதாக இம்ரான் கான் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஐஎஸ்ஐ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் பைசல் நசீர் தன்னை வஜிராபாத்தில் வைத்து படுகொலை செய்யத் திட்டமிட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீப்பின் கொடூர கொலையில் மேஜர் நசீருக்கு தொடர்பு இருப்பதாகவும் இம்ரான் கான் இரண்டு நாட்கள் முன்பு கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பல முறை கைதில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது வீட்டில் போலீஸ் முற்றுகையிட்டனர். அப்போது சரியாக வீட்டை விட்டு வெளியேறி அவர் எஸ்கேப் ஆனார்.
இந்தச் சூழலில் தான் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். துணை ராணுவப் படையினர் இம்ரான் கானை சுற்றி வளைத்து அவரை வாகனத்தில் ஏற்றும் வீடியோ டிரெண்டாகி வருகிறது. இம்ரான் கானை துணை ராணுவப் படையினர் மோசமாக நடத்தியதாக பிடிஐ கட்சியினர் சாடியுள்ளனர்.
பெருங்குழப்பம்: இம்ரான் கான் கைதை தொடர்ந்து அங்கே மிகப் பெரியளவில் வன்முறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள ராணுவ தளபதி வீட்டில் புகுந்து அடித்து நொறுக்கினர்.
மேலும்,ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தையும் அவர்கள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், பெஷாவரில் ரேடியோ பாகிஸ்தான் கட்டிடமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.