புதுச்சேரி சுற்றுலா நகரமாக விளங்குவதால் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஏற்கனவே புதுவையில் மக்கள் தொகையை விட வாகனங்களில் எண்ணிக்கை அதிகம். இதனால் பிரதான சாலைகள் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோடை விடுமுறை எதிரொலியாக புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அதிகளவில் நகர பகுதியில் உலா வருகிறது.
வாகனங்கள் நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள், கார்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகினறன. இது குறித்து போக்கு வரத்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தப்படும் கார்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.