போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட தக்ஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது. இதன் மூலம் கடந்த 40 நாட்களில் மூன்றாவது சிவங்கி புலி உயிரிழந்திருக்கிறது.
தக்ஷா என்ற பெண் சிவங்கிபுலி உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “தக்ஷா இன்று காலை காயமடைந்த நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து. தக்ஷா உடல் நிலையை கண்காணித்தனர். அதற்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் தக்ஷா உயிரிழந்தது.
இனப்பெருக்கத்திற்கு ஆண் சிவிங்கி புலிகள் இருந்த இருப்பிடத்தில் தக்ஷா திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் ஆண் சிவிங்கி புலியால் தக்ஷா தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூங்காவில் உள்ள பிற சிவங்கி புலிகள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மற்ற சிறுத்தைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, அவற்றில் எதுவும் இதுபோன்ற அறிகுறிகளைக் காட்டவில்லை. அவை முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றுகிறது, அவைகளே தங்களுக்காக வேட்டையாடுகின்றன” என்று தெரிவித்துள்ளது.
நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார். இந்த நிலையில், மேலும் 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. இவ்வாறு 20 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
இந்த நிலையில் சாஷா, உதய் என்ற இரு சிவிங்கி புலிகள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக தக்ஷா என்ற சிவிங்கி புலியும் உயிரிழந்துள்ளது.