மீன்களை போல ஐஸ் கட்டிகளுக்குள் மீனவரின் சடலம்..! கால்களை கட்டி கடலுக்குள் நடந்தது என்ன ?

தூத்துக்குடி அருகே கடலுக்கு சென்று கரைக்கு திரும்பிய படகில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீன்களை பதப்படுத்துவது போல ஐஸ்கட்டிகளை போட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் சாயல்குடி பகுதியை சேர்ந்த சரவண பிரபாகர் என்பவர் மீன் பிடி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 4 ம் தேதி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான படகில் சக மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

இநிலையில் கடலுக்கு சென்ற மீனவர் சரவண பிரபாகர் தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் வைத்து இறந்து விட்டதாக படகு உரிமையாளர் சேகருக்கு சக மீனவர்கள் வயர்லெஸ்ஸில் தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சரவணபிரபாகரின் உடலுடன் படகு திங்கட்கிழமை கரைக்கு திரும்பியது.

படகில் மீன்களை பதப்படுத்தி வைத்திருப்பது போல மீனவர் சரவண பிரபாகரின் சடலத்தை ஐஸ் கட்டி போட்டு பதப்படுத்தி கொண்டுவந்தனர். அவரது கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுக் காயம் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கரையில் இருந்து கடலுக்குள் சென்ற முதல் நாளே மீனவர் சரவணபிரபாகர் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், மறுத்ததால் படகில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும், அவர் கடலில் குதித்து விடாமல் இருக்க அவரை தனியாக படகில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்ததாகவும் ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை என்றும் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்

சக மீனவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சரவண பிரபாகர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என குற்றஞ்சாட்டி உள்ள உறவினர்கள் தரவைக்குளம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொல்லப்பட்ட மீனவருக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த மர்ம மரணவழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள தருவைகுளம் போலீசார் சரவண பிரபாகருடன் படகில் சென்ற சக மீனவர்களான ஞான செல்வம் , செல்வராஜ், பழனி, நிக்குலாஸ் , அதிர்ஷ்டராஜ், சுவிட்சன், நிக்கோலஸ் மணி ,சந்தன மாரி செல்வம் ஆகியோரிடம் நடுக்கடலில் படகில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.