சென்னை: டிடிவி தினகரனை நேற்று ஓ பன்னீர் செல்வம் சந்தித்தார். பின்னர் இருவரும் இணைந்து செயல்பட இருப்பதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன ஒரு கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஒ பன்னீர் செல்வம் ஒருபக்கம் சட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டே மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் எனக் கூறி வருகிறார்.
இதன்படி திருச்சியில் அண்மையில் மாநாடு ஒன்றையும் நடத்தினார். அதேபோல், கொங்கு மண்டலம் உள்பட 5 இடங்களில் ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார்.
டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொது ஓ பன்னீர் செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.டி.வி.தினகரனும் ஓ பன்னீர் செல்வமும், தொண்டர்களின் விருப்பப்படி அதிமுகவை மீட்டு திமுகவை வீழ்த்த இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தனர்.
விரைவில் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். டிடிவி தினகரனுடன் ஓ பன்னீர் செல்வம் கை கோர்த்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோல், தென் மண்டலங்களில் கணிசமான வாக்குகள் பிரியக்கூடும் என்பதால் வரும் நாடாளுமன்றத்தில் கூட்டணியில் இவர்களையும் சேர்த்துக்கொள்ள பாஜக, அதிமுக நிர்பந்திக்க வாய்ப்புகள் கூட இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. எந்த வழியிலும் ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், “டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த வித தாக்கமும் ஏற்படாது.
வேறு வகையில் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்தால் நீங்கள் சேர்த்துக்கொள்வீர்களா..இல்லை அவர்களோடு சேர்ந்துக்கொள்வீர்களா.. என்று சிலர் சொல்கிறார்கள்… திட்டவட்டமாக சொல்கிறோம். ஓபிஎஸ் போல நாங்கள் குழப்பவாதிகள் கிடையாது. நேற்றும் சரி,. இன்றும் சரி.. நாளையும் சரி… ஓபிஎஸ்சோ சசிகலாவோ, டிடிவியோ எந்த காலக் கட்டத்திலும் கட்சியில் சேர்ப்பதாக இல்லை. அது உறுதியான ஒன்று இதுதான் நாளைக்கும்.
அதேபோல சிலர் பேர் சொல்கிறார்கள். பாஜக நிர்பந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று.. பாஜக அதுபோல நிர்பந்தம் செய்யாது. அதிமுகவில் இந்த மூன்று பேருக்கும் கதவுகள் சாத்தப்பட்டு விட்டது. எந்த காலத்திலும் கட்சிக்கு வர முடியாது” என்றார்.
இதன் மூலம் டிடிவி தினகரனையோ, ஓ பன்னீர் செல்வத்தையோ ஒருபோதும் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதை பாஜகவிற்கு கொடுக்கும் மறைமுக மெசேஜ் ஆகவே அதிமுக இதை கூறியிருப்பதாக அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.