மாஸ்கோ : இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற நாள் ரஷ்யாவில் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ட்ரோன்கள் ஜெட் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து ஆண்டுதோறும் மே 9ம் தேதியை ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியை குறிக்கும் வெற்றி நாளாக ரஷ்யா கொண்டாடி வருகிறது.
போரில் உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் நாள் என்பதுடன் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடிய வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த தினம் இங்கு கொண்டாடப்படுகிறது.
இன்று இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் மாஸ்கோவில் உள்ள ‘ரெட் ஸ்கொயர்’ சதுக்கத்தில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்கும் ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து வாணவேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.
இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் இன்றைய கொண்டாட்டத்தில் ரஷ்யா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் அதிவேகமாக பறக்கக் கூடிய ஜெட் விமானங்கள் போன்றவை மாஸ்கோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரஷ்யா வசமிருக்கும் கிரீமியாவில் உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து சேதமடைந்தன.
இந்நிலையில் கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே போரைத் தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனின் 35க்கும் மேற்பட்ட ட்ரோன்களை நேற்று முன்தினம் இரவு சுட்டு வீழ்த்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement