கராச்சி,
பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 199 பேரை, வரும் 12ம் தேதி அந்நாட்டு அரசு விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து கராச்சி சிறையில் அடைக்கிறது.
அதே போல நம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பாக்., மீனவர்களை நம் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இந்த வகையில், பாக்., சிறையில், 654 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், இதில், 631 பேருக்கு தண்டனை காலம் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கராச்சியில் உள்ள லந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 199 இந்திய மீனவர்களை வரும் 12ம் தேதி அந்நாட்டு அரசு விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 199 இந்திய மீனவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக லந்தி சிறையின் உயர் போலீஸ் அதிகாரி காஸி நசீர் தெரிவித்தார்.
விடுவிக்கப்படும் மீனவர்கள், லாகூர் அழைத்துச் செல்லப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாக்., சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுல்பீக்கர் என்ற இந்தியர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்தார். 199 மீனவர்களை விடுவிக்கும் போது, சுல்பீக்கரின் உடலும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என, பாக்., அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement