தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நாளை காலை நடக்கவிருக்கிறது. இப்படியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, ‘பா.ஜ.க அனைத்து பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெற்று ஊழல் செய்கிறது’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தன. இப்படியான நிலையில், ‘மாநிலத்தில் 40 சதவிகித ஊழல், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ என வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் கடிதம், அரசியல் களத்தில் காட்டுத்தீயை பற்றவைத்திருக்கிறது. காரணம் என்ன… விரிவாக படிக்கலாம்!
ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு!
2022 ஏப்ரல் மாதம், கர்நாடகா பா.ஜ.க-வைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது, அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், ‘அரசு சார்பில் எனக்கு, ரூ.4 கோடிக்கு பணி ஒதுக்கப்பட்டது. அதை முடித்த பின்னரும் அரசு அதற்கான நிதி ஒதுக்கவில்லை. மொத்த பணியில், ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள், 40 சதவிகிதம் குறைக்கச் சொல்லுகின்றனர்’ என தேசிய ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.
அதன்பின், சில நாள்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் பாட்டீல், தனது தற்கொலை கடிதத்தில், ‘‘எனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம்’’ என எழுதியிருந்ததால், அரசியல் களத்தில் இந்தச் சம்பவம், காட்டுத்தீபோல் பரவியது.
இதையடுத்து, எதிரணியினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்த நிலையில், ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதற்கிடையில், கடந்த, ஜனவரியில், பணி முடித்ததற்கு அரசு நிதி ஒதுக்க தாமதித்ததால், மற்றொரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்டார்.
பிரதமருக்கே கடிதம்…
இதனால், கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம், பா.ஜ.க அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதுடன், ’கர்நாடகா அரசு, ஒப்பந்ததாரர்களிடம், 40 சதவிகித கமிஷன் பெறுவதை நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பி, அரசியல் களத்தில் அணு குண்டை தூக்கிப்போட்டனர்.
இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தில், ‘பா.ஜ.க 40 சதவிகித ஊழல் கட்சி’ என்ற, குற்றச்சாட்டை பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தி வாக்குச் சேகரித்தது. இந்தக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்த காங்கிரஸார், ‘பேசிஎம் – PayCm‘ என்ற ‘ஹைடெக்’ பிரசாரம் செய்தனர். Paytm போல் ஒரு போஸ்டரில், பசவராஜ் பொம்மையுடன் ஒரு, ‘QR Code’ வெளியிட்டு, அதை ஸ்கேன் செய்ததும், பா.ஜ.க-வின் துறைவாரியான ஊழல்கள் என, பெரும் பட்டியலையே வெளியிட்டு, அனலைக் கிளப்பியிருந்தனர்.
‘மக்களே மனசாட்சிப்படி வாக்களியுங்கள்’
இப்படியான நிலையில், இன்று, கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில், ஒரு பகீர் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘‘நமது அன்பிற்குரிய கர்நாடகா மாநிலத்தில், ஊழல் அச்சுறுத்தும் நிலையை எட்டியிருக்கிறது. 40 சதவிகித கமிஷன் ஏற்கெனவே பல ஒப்பந்ததாரர்களின் உயிரைப் பறித்திருக்கிறது; மக்களும், குறைபாடுள்ள உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மக்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கும்போது ஜனநாயகம் செயல்படுகிறது. ஊழல், நமது கூட்டு மனசாட்சியை ஆழமாக காயப்படுத்துகிறது” என பா.ஜ.க அரசை நேரடியாக ‘டேமேஜ்’ செய்வதுபோல் ‘லெட்டர் பேடில்’ எழுதியிருக்கின்றனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் தற்போது, இந்த கடிதத்தைப் பகிர்ந்து, ‘டிரெண்ட்’ ஆக்கி வருவதுடன், ’40 சதவிகித பா.ஜ.க-வை மக்கள் விரட்ட வேண்டும்’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து, கர்நாடகா காங்கிரஸ் ‘வார் ரூம்’ தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் நம்மிடம், ‘‘எப்போதும் அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதில், கடைநிலையில் இருப்பவர்கள்தான் ஒப்பந்ததாரர்கள். ஏனெனில், அரசு நிதி ஒதுக்க தாமதித்துவிடும் என்ற அச்சத்தில், ஒப்பந்ததாரர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒப்பந்ததாரர்களே ‘பா.ஜ.க 40 சதவிகிதம் கமிஷன் பெறுகிறது’ எனத் தெரிவித்திருப்பதிலிருந்தே நாம் பா.ஜ.க-வின், ‘40 சதவிகித ஊழல்’ ஆட்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார் சுருக்கமாக.
நாளை காலை, தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஒப்பந்ததாரர்களின் இந்த கடிதம், பா.ஜ.க-வுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.