சென்னை: Lal Salaam (லால் சலாம்) லால் சலாம் படத்தின் கதை குறித்தும், அதில் ரஜினி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ப்து குறித்தும் பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இரண்டு படங்களும் அவரது கரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தன. இதன் காரணமாக அடுத்து நடிக்கவிருக்கும் படங்களை ஹிட் படங்களாக கொடுத்துவிட்டு மீண்டும் பழைய ரஜினியாக திரும்பி ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்துவருகிறார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் ரஜினி: அந்தவகையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தின் ஷூட்டிங் 99 சதவீதம் முடிந்துவிட்டது. படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிம்ப்ஸுடன் சமீபத்தில் வெளியானது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
லால் சலாம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே லால் சலாம் படத்தில் கமிட்டானார் ரஜினி. அதனை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் படம் முழுக்க அவர் நடிக்கவில்லை 40லிருந்து 50 நிமிடங்கள்வரை அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். லால் சலாமின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் ரஜினி பங்கெடுக்கவிருக்கிறார்.
மொய்தீன் பாய்: ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கேரக்டரின் போஸ்டர் நேற்று முன் தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. பாட்ஷா படத்துக்கு பிறகு இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஆனால் வெளியிடப்பட்ட போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டரையும், அவரது லுக்கையும் வடிவமைப்பதில் ஐஸ்வர்யா கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என பலர் சமூக வலைதளங்களில் கூறினர்.
கதை என்ன?: இந்நிலையில் லால் சலாம் படத்தின் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் பின் தங்கிய குடும்பத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் டீமுக்கு தேர்வு ஆவார்கள் எனவும், அவர்கள் மும்பைக்கு கிரிக்கெட்டுக்காக செல்லும்போது அவர்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதில் ரஜினியின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் கதை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
ரீமேக் கதையா லால் சலாம்?: முன்னதாக லால் சலாம் படமானது ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு வெளியான கை போ சே (Kai po che) படத்தின் ரீமேக்தான் என கூறப்பட்டது. அந்தப் படத்திலும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைகள் பேசப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லால் சலாம் படமும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவருவது கவனிக்கத்தக்கது.