சென்னை : ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால்,விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தில் இஸ்லாமியராக நடித்திருப்பதால், இதற்கு முன் எந்தெந்த படங்களில் இஸ்லாமியராக நடித்தார் என்ற பட்டியலை ரசிகர்கள் எடுத்து வருகின்றனர்.
லால் சலாம் : லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சுமார் 20 நிமிட காட்சியில் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திரைப்படம் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சுகந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பாட்ஷா : நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷாவாக நடித்திருந்தார். 1995ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரகுவரன்,நக்மா நடிப்பில் உருவான இத்திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. பாட்ஷா படத்தில், தனது நண்பன் பாட்ஷா இருந்துவிட ரஜினி தனது பெயரை மாணிக் பாட்ஷாவாக மாற்றிக்கொண்டு இஸ்லாமியராக நடித்திருந்தார்.
அலாவுதீனும் அற்புத விளக்கும் : 1979ம் ஆண்டு ரஜினிகாந்த் கமல் இணைந்து நடித்த திரைப்படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இப்படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. இப்படத்தில் இஸ்லாமியராக கம்முருதீன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தின் நாயகன் கமல்ஹாசனும் இஸ்லாமியராகவே நடித்திருந்தார்.
ஜக்குபாய் : இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த திரைப்படம் தான் ஜக்குபாய். இந்த படத்தின் கதை முதன் முதலில் ரஜினிகாந்திற்குத்தான் சொல்லப்பட்டது. அதன்பின்பு தனிப்பட்ட காரணங்களால் அது சரத்குமாரின் கைவசம் போனது. ஒருவேளை அந்த ஜக்குபாயின் கேரக்டரை கூட லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.