அதிமுக மீது நடவடிக்கை எப்போ சார்.? – திமுகவை சீண்டும் கூட்டணி கட்சி.!

அதிமுக ஆட்சியில் நடந்துள்ள அடுக்கடுக்கான ஊழல் – முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக,காங்கிரசும் அரசியல் செய்வதாக அதிமுக செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார்!

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களை தீட்டுவது, நிறைவேற்றுவது, ஆய்வு செய்வது, பணம் வழங்குவது, டெண்டர் விடுவது, பயனாளிகளை வெளிப்படையாகத் தேர்ந்தெடுப்பது, உரிய காலத்தில் திட்டங்களை முடிப்பது என்று பல்வேறு பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ளது. ஊழலும் – முறைகேடும், வரிப்பணம் சூறையாடப்படுவதும் உரிய முறையில் தடுக்கப்படாததால் மக்களுக்குச் சேர வேண்டிய பலன் கிடைக்காமல் போவதாக சிஏஜி அறிக்கை பக்கம், பக்கமாக சுட்டிக்காட்டியுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை இரண்டும் ஒருசேர திரு எடப்பாடி பழனிச்சாமி வசமே இருந்தது. அந்த துறைகளில் ஊழல் மலிந்து கிடப்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. டெண்டர்கள் ஒரே கம்ப்யூட்டரிலிருந்து பலருக்காக அனுப்பப்பட்டது, அரசு கம்ப்யூட்டர்களிலிருந்து காண்ட்ராக்டர்களின் டெண்டர்கள் அனுப்பப்பட்டது என்பதில் ஆரம்பித்து ஏராளமான முறைகேடுகளை சி.ஏ.ஜி. அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.

ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஏலப்போட்டியைத் தவிர்த்து, சில நபர்களுக்கு மட்டும் அதிக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோன்று, ஊரக வளர்ச்சித்துறையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஐந்தாண்டு காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். 2.8 லட்சம் வீடுகள் மட்டுமே முடிக்கப்பட்டிருக்கின்றன. 89 ஆயிரம் வீடுகளுக்கு நான்காண்டுகள் முடிந்தபிறகும் முதல் தவணை பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது.

ஒன்றிய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ரூ. 1515 கோடி தமிழக அரசால் பெறமுடியாமல் போய்விட்டது. பயனாளிகளில் 60 சதவிகிதம் பட்டியலினத்தவர்கள் இருக்க வேண்டும் என்பது கடைபிடிக்கப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வீடு ஒதுக்கப்பட்டவர் ஒருவராகவும், பணம் பெற்றவர் மற்றொருவராகவும் இருக்கும் ஏராளமான நிகழ்வுகளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆய்வு செய்யப்பட்ட இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் முறைகேடு செய்யும் நோக்கத்தோடு ஆவணங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. வீடு இருக்கும் இடங்களை பற்றி புவிசார் குறியீடுகளை ஆராய்ந்தால் வங்காள விரிவுகுடாவிலும், உத்தரப்பிரதேசத்திலும், புதுடில்லியிலும் மற்றும் பல மாநிலங்களிலும் காட்டப்படுகிறது. இப்படி ஏராளமான முறைகேடுகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதுபோன்று மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கியது, மடிக்கணிணியை உரிய காலத்தில் வழங்காமல் அவை பயனற்று போனது, மாணவர்களுக்கு காலணி வாங்கியதில் முறைகேடு என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை சி.ஏ.ஜி. முன்வைத்துள்ளது.

இவையனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் தொடர்பில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை.‌ தமிழ்நாடு அரசு சிஏஜி அறிக்கைகளில் வெளிவந்துள்ள ஊழல் & முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தோர், துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்.’’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.