சென்னை: அமைச்சரவையில் இலாகா மாற்றப்படுவது குறித்த தகவல் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீயாய் பரவி வரும் நிலையில் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மன வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம் திமுக பொதுச்செயலாளராகவும், மூத்த அமைச்சராகவும் இருக்கும் தாம், பல விஷயங்களை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பது தான்.
நேற்றுக்கூட அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு யாமறியோம் பராபரமே என விரக்தியுடன் துரைமுருகன் பதிலளித்ததற்கு இது தான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் குறித்தோ, அமைச்சர் பதவியிலிருந்து யாரை நீக்குவது என்பது பற்றியோ, அமைச்சரவையில் யாரை சேர்ப்பது என்பது குறித்தோ முன்கூட்டியே தன்னிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவில்லை என்பது துரைமுருகனின் வருத்தத்துக்கு காரணம் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்காததே துரைமுருகனுடன் அதுபற்றி ஆலோசிக்காததற்கு காரணம் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அமைச்சரவை விவகாரத்தை மையப்படுத்தி கடந்த ஒரு வாரமாக சர்ச்சைக்குரிய வகையில் திமுக குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதை துரைமுருகன் ரசிக்கவில்லை.
இதனால் தான் இந்த விவகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்பி தனது விருப்பத்தையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
அதனடிப்படையில் தான் அமைச்சரவையிலிருந்து ஒருவர் மட்டுமே நீக்கப்படுகிறார் என்பதையும் மற்றவர்கள் நீக்கப்படவில்லை என்பதையும் நேற்றிரவே வெளியிட்டு யூகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாம்.