திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நிறுவினார். தலித் மக்களின் கலை, கலாச்சாரம், வாழ்வியல் குறித்து இந்த பண்பாட்டு மையம் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வு தற்போது சர்ச்சையாகி கைது வரை சென்றுள்ளது.
‘விக்ரம்’ வெற்றியால் உற்சாகம் – லோகேஷூக்கு பா ரஞ்சித் வாழ்த்து!
இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கை: ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது. எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ பேசுவதோ கவிதையின் நோக்கமல்ல.
அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரனை ‘வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்’ என்கிற பொய் பிரச்சாரத்ததை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E 4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்; இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும். அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வழக்கை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், சிவகங்கை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் ம.சக்தி என்கிற சத்தியநாதன் ஊடகங்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் விடுதலை சிகப்பிக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சொன்னதோடு காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு லட்சம் நபர்களைத் திரட்டி விடுதலை சிகப்பியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவ்வழக்கைச் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க விடுதலை சிகப்பி தயாராகிவருகிற இச்சூழலில், அவரது சொந்த கிராமத்தில் அவரது பெற்றோர்கள் வசிக்கும் வீட்டை முற்றுகையிடுவோம் என்கிற பேட்டி விடுதலை சிகப்பி மற்றும் அவரது பெற்றோர்களையும் உறவினர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே விடுதலை சிகப்பியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளனர்.
சில இந்துத்துவ அமைப்பினர் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்திச் சமூக பதற்றத்தை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இதை உடனடியாகக் கருத்தில் கொண்டு, விடுதலை சிகப்பி மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் சுற்றுப்புறத்தாருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டுகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.