இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ராணுவத்திற்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இவரது கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தது. இம்ரான் கானின் இந்த வெற்றி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
4 ஆண்டுகள் இம்ரான் கான் ஆட்சி செய்த நிலையில், அவரது ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ஆட்சியை கவிழ்த்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பதவி பறிபோன நிலையில், தற்போது ஷெபாஸ் ஷெரிப் அங்கு பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதம் உள்பட 140 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அல்-காதிர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் முறைகேட்டு வழக்கில் ஆஜர் ஆவதற்காக இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வந்தார். அப்போது அங்கு திடீரென வந்த ரேஞ்சர் படையினர் இம்ரான் கானை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இம்ரான் கான் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டதோடு, அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர். கராச்சி, பெஷாவர், லாகூர் அந்த நாட்டின் முக்கிய நகரங்களிலும் இம்ரான் கான் கட்சித்தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தானின் மக்கள் தொகை அதிகம் கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்தனர். பல இடங்களின் வன்முறையில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். சில பகுதிகளில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் தரப்பில் 130 பேர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் பதற்றம் நீடிப்பதால் அங்கு ராணுவம் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ராணுவத்திற்கு இந்த கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லாகூரில் உள்ள காவல் நிலையம் மீது இம்ரான் கான் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டிரக்குகளில் வந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள், காவல் நிலையத்தின் கேட்டை அடித்து நொறுக்கிவிட்டு சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்ரான் கான் கைதால் பாகிஸ்தான் முழுவதும் கொந்தளிப்பான நிலையே காணப்படுகிறது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று சரிந்தது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.