ஜெய்ப்பூர்: அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த விழாவில் பிதமர் பேசியாதாவது: “நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசானது ராஜஸ்தான் மக்களுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஆனால் அடிப்படை வசதிகளுடன் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் போதுதான் வேகமான வளர்ச்சி சாத்தியமாகும் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. போதுமான மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருந்தால், நாம் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியது இருந்திருக்காது. எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தால் ரூ.3.5 லட்சம் கோடி செலவில் ஜல்ஜீவன் அமைச்சகம் ஏற்படுத்தும் தேவை இருந்திருக்காது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க முடியாது. அவர்களுக்கு அரசியல் நலனே முக்கியம். அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கலகத்தை மட்டுமே உருவாக்குவார்கள்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “நமது அரசின் நல்லாட்சியால் நாட்டின் பொருளாதார வளச்சியடைந்த மாநிலங்களில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நமது மாநிலத்தில் நிறைவேற்றப்படாமல் மீதமிருக்க கூடிய திட்டங்கள் குறித்து நான் உங்களுக்கு (பிரதமர் மோடி) கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். ஜனநாயகத்தில் பகையாளிகள் என்று யாரும் இல்லை. இது கருத்தியலுக்கான யுத்தம். நாட்டு மக்களிடம் எப்போதும் அமைதியும் ஒற்றுமயைும் நிலவ வேண்டும். வன்முறை வளர்ச்சியை பாதிக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு சிறப்பாக செயல்பட முடியாது. எதிர்க்கட்சிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
ராஜ்சமந்த் மற்றும் உதய்பூர் இடையே இருவழி சாலை அமைப்பதற்கும், உதய்பூர் ரயில் நிலையத்தினை புனரமைப்பு செய்வதற்குமான திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நத்வாராவிலிருந்து நத்வாரா நகரம் வரை புதியபாதை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல், தேசிய நெடுஞ்சாலை 48-ன் உதய்பூர் – ஷாம்லாஜி வரையிலான 114 கி.மீ. தொலைவிலான ஆறு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 25-ல் பார் பிலாரா – ஜோத்பூர் இடையில் 110 கி.மீ தொலைவுக்கு உள்ள நான்கு வழிச்சாலையில் விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.