கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வழக்கத்தைவிட இந்த முறை, செல்வ செழிப்பான வேட்பாளர்களை கட்சியினர் தேர்ந்தெடுத்த நிலையில், 1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள் களம்கண்டிருக்கின்றனர்.
மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களுக்கு, சேலைகள், தங்க நாணயம், வெள்ளி விநாயகர் சிலை எனப் பலவற்றை பரிசுப்பொருள்களாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான நிலையில், மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ பேட்டை (கே.ஆர்.பேட்) தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கெளவுடாவின் ஆதரவாளர்கள் கொடுத்த பரிசுப்பொருள்களை, மக்கள் தூக்கியெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரிசுகளைத் தூக்கியெறிந்த மக்கள்!
கே.ஆர்.பேட்டை தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் நாராயண கெளவுடாவின் ஆதரவாளர்கள் கடந்த, இரண்டு நாள்களாக தொகுதி மக்களுக்கு, விலையுயர்ந்த சேலைகள், கோழிகள் என, பலவற்றை பரிசுப்பொருள்களாகக் கொடுத்ததாகத் தெரிகிறது.
இன்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், அந்த தொகுதிக்குட்பட்ட கல்லனகிரி கிராம மக்கள், பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகளுக்கு திரளாகச் சென்று, ‘எங்கள் ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல. பி.ஜே.பி டௌன்… டௌன்’ என்ற கோஷங்களை எழுப்பி, பா.ஜ.க நிர்வாகிகள் கொடுத்த பரிசுப்பொருள்களை வீசியெறிந்திருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி, அரசியல் களத்தில் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து, ‘‘கர்நாடகா மக்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்! கர்நாடகாவில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள், பரிசுப்பொருள்களை ஓட்டுக்கு லஞ்சமாகக் கொடுத்த நிலையிலும், கிராம மக்கள் தைரியமாக அவர்களின் பரிசுகளை நிராகரித்து, பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களிடையே, ஊழல் நிறைந்த, 40 சதவிகித பா.ஜ.க அரசுக்கு எதிராக நிலவும் அலைக்கு, ஒரு சக்திவாய்ந்த சாட்சி. இந்த அலை நாடு முழுவதிலும் இருக்கிறது. இந்த வஞ்சக பா.ஜ.க அரசாங்கத்தை தூக்கி எறிந்து, புதிய நம்பிக்கையில் விடியலை ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது” எனக் காட்டமாக பதிவிட்டிருக்கின்றனர்.
காங்கிரஸின் இந்தப் பதிவை, பா.ஜ.க-வினர் விமர்சித்து வருவதுடன், காங்கிரஸும் பரிசுகள் வழங்கியதாகக் கூறி, படங்கள், வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.