பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர்.
இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முற்பகல் 11 மணி நிலவரம்: முற்பகல் 11 மணி நிலவரப்படி கர்நாடகா முழுவதும் 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர் – கேஎஸ் ஈஸ்வரப்பா: “கர்நாடகா முழுவதும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். நாங்கள் 140 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறுவோம். காங்கிரஸும் , மதச்சார்பற்ற ஜனதாதளமும் முஸ்லிம்களை திருப்திப்படுத்த நினைத்தாலும், தேசியவாத எண்ணமுள்ள முஸ்லிம்கள் பாஜகவுடன் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் பிஎஃப்ஐ போன்ற தேசவிரோத அமைப்புகளே இருக்கின்றன” என்று கர்நாடக பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
ஜேடிஎஸுடன் தேர்தலுக்குப் பின் கூட்டணி கிடையாது – டி.கே. சிவக்குமார்: ஜேடிஎஸ்ஸுடன் தேர்தலுக்கு பின்னர் நிச்சயமாக கூட்டணி கிடையாது என்றும் காங்கிரஸ் தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி குறைந்தபட்சம் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது எனது கடைசி தேர்தல் – சித்தராமையா: முன்னாள் முதல்வர் சித்தராமையா வாக்களித்த பின்னர் கூறுகையில், “வாக்காளர்கள் அமோக வரவேற்பளிக்கிறார்கள். நான் 60 சதவீதத்திற்கும் அதிமான வாக்குகள் பெறுவேன். காங்கிரஸ் தனிப்பெரும்மான்மையுடன் ஆட்சி அமைக்கும். இது என்னுடைய கடைசித் தேர்தல். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதேநேரத்தில், அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.