கர்நாடக தேர்தல் | வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பிரகாஷ்ராஜ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தேலில் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறையவடைகிறது. வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக கர்நாடக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காலை முதல் பொதுமக்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சாந்தி நகர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “நாம் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தேர்தலிலும், அரசியலிலும் தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் நமக்கு கிடைக்கும் இடம் இதுவே. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். கர்நாடகா அழகான மாநிலமாக இருக்க வேண்டும். நல்லிணக்கத்தை பாதுகாப்போம்.” இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.

மேலும் வாக்களித்த பிறகு தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள பிரகாஷ்ராஜ், “எனதருமை கன்னட நண்பர்களே, நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிரானவன். 40% ஊழல்வாதிகளுக்கு எதிராக என்னுடைய வாக்கை செலுத்தினேன். நீங்கள் உங்கள் மனசாட்சிப் படி நடந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் கர்நாடகா அமைதிப் பூங்காவாக திகழ வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.