கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம்: சிஎம்டிஏ கூட்டத்தில் ஒப்புதல் 

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மற்றும் அந்த ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தை இணைக்க ஆகாய நடைபாதை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து ஜுன் மாதம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்நிலையில், இந்தப் பணிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 273-ஆவது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்த, தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர், ரயில் பாதையில் புதிய புறநகர் ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு ஆகாய நடைமேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்கு நிதியளிப்பது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,” கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மின்சார ரயில் நிலையம் கிளாம்பாக்கத்தில் இல்லை.

எனவே, கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்தது. இதற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ரூ.20 கோடி செலவில் இங்கு ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த பணிகளை ரயில்வே மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ.4 லட்சம் நிதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் ரயில்வே நிர்வாகத்திற்கு அளிக்க உள்ளது. ஆகாய நடைபாதை அமைக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜுலை மாதம் டெண்டர் கோரப்படும். இதன்பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.