கேரள படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2018 பட தயாரிப்பாளர் நிதி உதவி

கடந்த ஞாயிறன்று கேரளாவில் மலப்புரம் அருகில் உள்ள தினூரில், தூவல் தீரம் ஆற்றில் சவாரி சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த குடும்பத்திற்கு கேரள அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 2018 என்கிற படத்தின் தயாரிப்பாளர், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தங்களது படக்குழு சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்..

கடந்த 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தையும் அதற்காக நடந்த மீட்பு பணிகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 2018. டொவினோ தாமஸ், வினீத் சீனிவாசன், குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே நிவின்பாலி-நஸ்ரியாவை வைத்து 'ஓம் சாந்தி ஒசானா' என்கிற படத்தை இயக்கிய இவர் அதற்கடுத்து 'ஒரு முத்தச்சி கதா' என்கிற படத்தை இயக்கி இருந்தார்.

ஆனால் இவருக்கு மற்ற படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வரவே, டைரக்சனை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்க போய்விட்டார். இந்த நிலையில் தான் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த 2018 படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் அந்த மழை வெள்ளத்தின் பொது சந்தித்த துயரத்தை தரூபமாக படமக்கியுள்ளதாக கூறி, இந்த படம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.