சூர்யகுமார் யாதவின் ஆக்ரோஷ ஆட்டம்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை மாஸ் வெற்றி!!

ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி 2.2 ஓவரில் 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல், கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த லுமூர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் டு பிளசிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கேதார் ஜாதவ் 12 ரன்களுடனும், ஹசரங்கா 12 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் 21 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன், வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் அதிரயாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியில் கேமரூன் கிரீன் 2 ரன்களும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வதேரா 52 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 16.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.