இந்தியர்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதாக குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவின் ஹக்கிபிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலர் சூடானில் சிக்கியிருந்ததாகவும், அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், சட்டமன்ற தேர்தலில் அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று காங்கிரஸ் நினைத்ததாகவும் கூறினார்.
மேலும் ராஜஸ்தானை ஆளும் காங்கிரசை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, சொந்தக்கட்சி எம்.எல்.ஏக்களையே முதலமைச்சர் அஷோக் கெலாட் நம்புவதில்லை என்றும், எம்.எல்.ஏக்களுக்கு கெலாட் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.