திருப்பதி :ஜம்மு – காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவில் மகாசம்ப்ரோக்ஷணத்தை ஜூன் 8ம் தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள மசீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி பணிகளை நேரில் ஆய்வு செய்த தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று கூறியதாவது:
தொலைதுாரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக ஜம்மு – காஷ்மீர் அரசு ஒதுக்கீடு செய்த 62 ஏக்கர் நிலத்தில் 30 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் உபகோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலில் ஜூன் 8-ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை மகாசம்ப்ரோக்ஷணம் நடக்கும். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கான இலவச தரிசனம் தொடங்க உள்ளது. இக்கோவில் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் ஜம்மு – – கத்ரா வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கும் வரும் பக்தர்கள் ஏழுமலையானையும் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement