தமிழகத்தில் இனி 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் நடக்கும் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகே வாகை மரத்திடலில் தமிழக அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் வெங்கடேன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “தமிழக முதலமைச்சர் 24 மணி நேரமும் மக்களுக்காக அயராது உழைத்து வருகிறார்.
மக்களின் தேவைகளை உடனுக்குடன் செய்து வருகிறார். சட்டசபையில் ஆளுநர் பேசியதைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டும் என்று எதிர்த்து நின்ற ஒரே தலைவர் என்றால் அது ஸ்டாலின் தான். திமுகவை குடும்பக்கட்சி, வாரிசு கட்சி என்று எல்லாம் கூறுவது மிகவும் தவறு.
தமிழகத்தில் இனி திமுக தான் 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும். அதிமுக எதிர்க்கட்சியாக இருக்குமே தவிர பாஜகவிற்கு இங்கு எந்த வேலையும் கிடையாது. தென்காசி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நலத் திட்டப் பணிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்.
அதுமட்டுமல்லாமல், மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி உள்ளிட்டவையும் விரைவில் அமைக்கப்படும். தென்காசியில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.