தமிழக அமைச்சரவை மாற்றம்: யார் யாருக்கு என்ன துறை? ஸ்டாலின் மீது சீனியர் கோபம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் எஸ்.எம்.நாசரை நீக்கவும், டி.ஆர்.பி.ராஜாவை சேர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில் ஆளுநரும் ஒப்புதல் அளித்த நிலையில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

நாசர் பதவி காலியானதோடு மட்டுமல்லாமல் அமைச்சரவையில் உள்ள பலரது இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

சர்ச்சை ஆடியோ வெளியாகி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக அவர் விளக்கமளித்த போதும், முதல்வர் ஸ்டாலினும் மட்டமான அரசியலுக்கு விளம்பரம் தேடி தரவில்லை என்று கடந்து போன போதும் அவரது துறை கட்டாயம் மாற்றப்படும் என்கிறார்கள். அவரிடமிருக்கும் நிதித்துறை தங்கம் தென்னரசுவிடம் செல்ல உள்ளதாக சொல்கிறார்கள். நிதித்துறையுடன் துரைமுருகன் வசம் உள்ள கனிம வளத்துறை தங்கம் தென்னரசுவுக்கு வர உள்ளதாம்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு மனோ தங்கராஜ் வசமுள்ள தகவல் தொழில் நுட்பத்துறை கிடைக்க உள்ளதாம். மனோ தங்கராஜுக்கு நாசரின் பால் வளத்துறை வழங்கப்படலாம் என்கிறார்கள்.

புதிதாக அமைச்சரவைக்குள் வரும் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை வழங்கப்பட உள்ளதாம்.

துரைமுருகனுக்கு சட்டத்துறையும், தற்போது சட்டத் துறை அமைச்சராக உள்ள ரகுபதிக்கு நீர்வளத்துறை வழங்க வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள்.

துரைமுருகன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடும் அதிருப்தியில் உள்ளார் என்பதை நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்திப்பின் போதே அறிந்து கொள்ள முடிந்தது. தனக்கு எதுவும் தெரியாது, உங்களுக்கு தெரிந்தது தான் எனக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றம் குறித்தெல்லாம் நீங்கள் சித்தரஞ்சன் சாலைக்கு சென்று தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

முதலமைச்சரிடம் கேளுங்கள், தளபதியிடம் கேளுங்கள் என்று தான் வழக்கமாக கூறுவார், ஆனால் முதல்வர் வீடு அமைந்திருக்கும் சித்தரஞ்சன் சாலையை குறிப்பிட்டு சொல்வதன் மூலம் முதல்வர் குடும்பத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்றும் திமுகவுக்குள் பேச்சு அடிபட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.