கும்பகோணம்: தமிழக அரசு வழங்கிய நிதியில் கிடைத்த வட்டித் தொகையில் 89 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்று தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கும்பகோணத்தில் நடைபெற்ற இ-சேவை மைய திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியது, “ தமிழக முதல்வர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1068 கி.மீ. நீளம் வாய்க்காலை தூர் வாருவதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இங்கு கடந்த 2021-22-ம் மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் தலா 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இரண்டையும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்க முதல் கட்டமாக 66 ஆயிரம் டன் அளவிலான குடோன்கள் கட்டப்பட்டுள்ளன.
இதே போல் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், பலமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன்படி கும்பகோணம் தொகுதியில் 25 ஆயிரம் டன் நெல் சேமிக்கும் குடோன் வசதி அமைப்பதற்கான கோப்புகள் ஒப்புதலுக்காக இறுதி கட்டத்திலுள்ளது. அந்த ஒப்புதல் பெற்ற பின் விரைவில் இங்கு குடோன் அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் புதிதாக 162 அங்கன்வாடி மைய கட்டிடங்களும், 149 குழந்தைகள் நேய பள்ளிகள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தமிழக அரசு வழங்கிய நிதிக்குக் கிடைத்த வட்டியின் மூலம் 26 பள்ளி கட்டிடங்கள், 28 அங்கன்வாடி கட்டிடங்கள், 31 அங்காடிகள், 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 89 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.