இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அதிதி பாலன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, “ சினிமாவை நேசித்தால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் நான் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன். நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.
அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே கால கட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால் அவர் முதலில் இயக்குனராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.
விஜய்யை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன்.என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.
ஆனால் தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். கவுதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார்.அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி“ என்று பேசியுள்ளார்.