நடிகை பலாத்கார வழக்கை ஜூலை 31க்குள் முடிக்க கோர்ட் உத்தரவு
கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சுனில் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
பலாத்கார சம்பவம் நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணையை முடிப்பதற்கு பலமுறை உச்சநீதிமன்றம் கெடு விதித்தபோதிலும், பல்வேறு காரணங்களால் விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றத்திடம் பலமுறை தனி நீதிமன்றம் கால அவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி நடிகர் திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து விசாரனை நீதிமன்றம் தாக்கல் செய்த அறிக்கையில், நடிகர் திலீப் தரப்பில்தான் விசாரணையை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்றம், வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.