பதீரனா அசத்தல் : 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்குவாட் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் களமிறக்கினர். இந்த ஜோடியில் கான்வே 10 ரன்னிலும், கெய்குவாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மொயின் அலி 7 ரன்னிலும், ரகானே 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே, அம்பதி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிவம் துபே 12 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 25 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ராயுடு 17 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை 16.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பின்னர் களமிறங்கிய ஜடேஜா மற்றும் கேப்டன் டோனி கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 9 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்த டோனி கடைசி ஓவரில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சார்பில் கேப்டன் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் வார்னர் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து பிலிப் சால்ட் 17 ரன்களும், மிட்செல் மார்ஷ் 5 ரன்னும், எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, ரூசோ ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தனர். இந்த ஜோடியில் மணீஷ் பாண்டே 27 (29) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரிலே ரூசோவும் 35 (37) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் 21 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரிப்பல் படேல் 10 (16) ரன்களும், அடுத்து களமிறங்கிய லலித் யாதவ் 12 (5) ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ஹக்கிம் கான் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.