சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார். அவர் நாளை பதவியேற்கிறார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த 2 வாரங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துளார்.
ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்கிறார். ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்தராவ் வி பாட்டில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள டிஆர்பி ராஜா, திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 3-வது முறையாக மாற்றம் செய்யப்படுகிறது.